PUBLISHED ON : மே 17, 2010 12:00 AM

அத்வானியின் கண்ணியம்!
"சோனியாவும், அத்வானியும், நட்பாகப் பழகுவதைப் பார்த்தால், எனக்குப் பொறாமை ஏற்படுகிறது' என, தமிழக முதல்வர் கருணாநிதி சொல்வது நியாயம் தான்.
அந்த அளவுக்கு, அவர்களின் நடவடிக்கை தரமாக அமைந்து விடுகிறது. பா.ஜ.,வில், அத்வானி, நாகரிகம் மிகுந்த தலைவர். பார்லியில் பேச இவர் சுற்று வரும்போது, மிக கண்ணியமான வார்த்தைகளைத் தான் பயன்படுத்துவார். அரசின் கொள்கைகள், திட்டங்களை விமர்சனம் செய்யும்போது, சம்பந்தப்பட்டவர்கள் உணரும் வகையில் பேசுவார். காங்., கட்சியினரைச் சுட்டிக் காட்டிப் பேசுகையில், சில நேரங்களில், சோனியா முகத்தைச் சுளிப்பார்.ஆனால், எந்தக் கட்சித் தலைவர் அத்வானியை விமர்சனம் செய்தாலும், இது போன்ற, "முகச் சுளிப்பு' செய்கையில், அவர் ஈடுபடவே மாட்டார். தகுந்த, கண்ணியமான வார்த்தைகளால் பதிலடி கொடுப்பார்.எந்தக் கட்சித் தலைவரையும் மரியாதையுடன் விளிப்பார். மறைந்த தலைவர்களின் உருவச் சிலைக்கு மாலை அணிவிக்கும் விவகாரத்திலும், கண்ணியம் காப்பார் அத்வானி.பார்லிமென்டில் மறைந்த தலைவர்களின் உருவச் சிலை, படங்கள் உள்ளன. இவர்களில், எந்தத் தலைவரின் அஞ்சலி தினம் வந்தாலும், மறக்காமல், பார்லிமென்டுக்கு வந்து, மலர் மாலை அணிவிப்பது அத்வானியின் வழக்கம்.இந்த நடைமுறையை, வேறு எந்தக் கட்சித் தலைவரும் பின்பற்றுவது இல்லை.கண்ணியமான தலைவர்கள் இருக்கும்போது அவர்களிடம் நட்பு பாராட்ட யாருக்கு தான் பிடிக்காது?